Monday, October 21, 2013

நினைவு என்பது...

Brain
நினைவு என்பது மனதில் இருக்கிறது. ஏறக்குறைய அனைத்துமே மனதில் இருக்கிறது என்றே கூறலாம். உளவியல் நிபுணர்களைப் பொறுத்த வரை, மனம்தான் எல்லாம்.

மனதிற்கு வெளியே வேறு உலகம் என்று எதுவும் கிடையாது. மனம்தான் இன்னொரு உலகைப் பற்றிய கற்பனையை நமக்குத் தருகிறது. நாம் வாழும் உலகில் நாம் காணும் விஷயங்கள் நமது மனதைப் பொறுத்தே அமைகின்றன. நமது உணர்ச்சிகளும், எண்ணங்களும், உலகம் மற்றும் வாழ்வைப் பற்றிய நமது பார்வையை தீர்மானிப்பதோடல்லாமல், நமது ஆரோக்கியம், ஏற்புத்திறன் மற்றும் தீர்வுகாணும் தன்மை ஆகியவற்றையும் நுட்பமாகப் பாதிக்கின்றன.

ஒரு வளர்ந்த மனிதனின் மூளையானது சுமார் 11,000 மில்லியன் மூளை செல்கள் அல்லது நியூரான்களைக் கொண்டுள்ளது. நியூரானுக்கு நடுவில் செல் உடல் இருக்கிறது. அவற்றில் மெல்லிய இழைகள் இருக்கின்றன. இந்த இழைகளின் மூலமே, நியூரான்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. இந்த 11,000 நியூரான்களின் உள் இணைப்புகள் மற்றும் உப பகுதிகளின் எண்ணிக்கைக்கு கணக்கில்லை என்பதால், நமது மூளையின் திறனுக்கு அளவில்லை. எனவே மனித மூளையானது, வாழ்நாளில் நடக்கும் அனைத்து விஷயங்களையுமே பதிவு செய்து கொள்கிறது. 

இந்த பதிவுசெய்யும் செயல்பாடு பற்றி சிலவிதமான கோட்பாடுகள் உள்ளன. இது எலக்ட்ரிகல் செயல்பாடு எனவும், இரசாயன செயல்பாடு எனவும் அல்லது இரண்டும் கலந்தது எனவும் சொல்லப்படுவதுண்டு. இந்த பதிவு செய்தலானது, ஒவ்வொரு விதமான செயல்பாடுகளுக்கும் ஏற்றவகையில் மாற்றம் செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. நினைவானது மூளையின் வெவ்வேறு பகுதியில் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு பதியப்பட்டாலும், அது முழுமை என்ற நிலையில்தான் இருக்கிறது என்ற கருத்துக்கு ஆதாரம் இருக்கிறது. இந்த நிலையை ஹோலோகிராமுடன் ஒப்பிடலாம். 

நமது மூளையானது எவற்றையெல்லாம் சேகரித்து வைக்கிறது என்று பார்த்தால், நாம் பார்ப்பது, கேட்பது, உணர்வது என அனைத்தையும் அது பதிவு செய்கிறது. நாம் தூங்கும் போது எதையும் அதிகமாக பதிவு செய்ய முடியாததற்கு காரணம், நமது புலன்கள் அந்த சமயத்தில் எதையும் அரிதாகவே உணர்கின்றன.