Thursday, October 10, 2013

பார்ததும் காதலா??

Heart
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.


கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப்போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத்தான் கண்டதும் காதல் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து ரஷ்யாவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கண்டதும் காதல் சாத்தியம்தான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் வாக்களித்துள்ளனர். முதல் பார்வையிலேயே காதலில் சிக்கியது உண்மைதான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

முதன் முதலாக அவளை பார்த்த உடன் எனக்குரியவள் அவள்தான் என்று என் மனம் உடனே முடிவு செய்துவிட்டது என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57 சதவிகித ஆண்களும், 46 சதவிகித பெண்களும் கூறியுள்ளனர். அதேசமயம் 19 சதவிகிதம் பேர் காதல் உணர்வு உடனே ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

கண்டதும் காதல் என்பது வடிகட்டிய பொய்! தன்மனதிற்குப் பிடித்த ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு காம உணர்ச்சி மட்டுமே ஏற்படும் என்று லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா கூறியுள்ளார். அவர் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டார். தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்தார்.

இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்றும் அவர் நிரூபித்துள்ளார்.

உங்களுக்கு எப்படி உங்களவரை பார்த்த உடன் உங்க மனசுக்குள் மணியடிச்சுதா?